வேலூர்

வேலூர் அரசு மருத்துவமனையில் நவீன கண் பரிசோதனை கருவி

7th Sep 2019 11:48 PM

ADVERTISEMENT

தேசிய கண்தான இரு வார விழாவையொட்டி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ஓசிடி எனும் நவீன கண் பரிசோதனை கருவி மக்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கப்பட்டது. 
தேசிய கண் தான இரு வார விழா கடந்த ஆகஸ்ட் 25}ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) நிறைவடைகிறது. இதையொட்டி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு குறித்த பிரசாரம், விழிப்புணர்வு ஓவியம், கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
கல்லூரி முதல்வர் ஆர்.செல்வி தலைமை வகித்துப் பேசியது: 
கண்தானம் செய்வதால் சமுதாயத்துக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, யாரெல்லாம் கண்தானம் செய்யலாம் என்றால் கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடு உள்ளவர்கள், கண்ணில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், மூக்கு கண்ணாடி அணிந்தவர்கள், சர்க்கரை  நோயாளிகள் என அனைவரும் கண்தானம் செய்யலாம். பார்வையற்றவர்களுக்கு பார்வை கிடைக்க பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார்.
மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் 80 பேர் முன்வந்து கண்தான உறுதி மொழி அளித்தனர். அவர்களுக்கு கல்லூரி முதல்வர் பாராட்டுச் சான்று வழங்கினார். 
நிகழ்ச்சியில், ராணி எலிசபெத் திட்டம் மூலம் நன்கொடையாக பெறப்பட்ட ஓசிடி எனும் நவீன கண் பரிசோதனைக் கருவியை மக்கள் பயன்பாட்டுக்காக அவர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள இந்தக் கருவி மூலம், சர்க்கரை நோய், கண் அழுத்த நோய், விழித்திரை பாதிப்புகள் ஆகியவற்றை சில நிமிடங்களில் கண்டறிய முடியும். இதனால், நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து உயர்தர சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ராஜவேலு, துணை முதல்வர் முகம்மதுகனி, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், கண் சிகிச்சைப் பிரிவு துறை தலைவர் பிரமிளா, துணைத் தலைவர் விஜய்சோப்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT