வேலூர்

மது அருந்தி லாரி ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

7th Sep 2019 02:51 AM

ADVERTISEMENT

வேலூரில் மது அருந்தி லாரியை ஓட்டிய ஓட்டுநருக்கு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தை கடுமையாக்கியுள்ளது. 
இதன்படி, போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த அபராதத்தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், காட்பாடி சாலையிலுள்ள ஓடைப்பிள்ளையார் கோயில் அருகே கடந்த 2-ஆம் தேதி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த ஒரு லாரியை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். 
அப்போது அந்த லாரியை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த கொண்டாரெட்டி மது அருந்தி, லாரியை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
இந்த வழக்கு வேலூர் 3-ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மது அருந்தி லாரியை ஓட்டி வந்த கொண்டாரெட்டிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 
வேலூர் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT