வேலூர்

மணல் கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு வாரத்தில் 34 வாகனங்கள் பறிமுதல்

7th Sep 2019 05:56 AM

ADVERTISEMENT

மணல் கடத்தலில் ஈடுபட்டதாக வேலூரில் கடந்த ஒரே வாரத்தில் 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம் முழுவதும் மணல் கடத்தலைத் தடுக்க போலீஸார் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக வேலூர், காட்பாடி, அரக்கோணம், குடியாத்தம், ராணிப்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 
இந்த ஒருவாரத்தில் மட்டும் மணல் கடத்தல் தொடர்பாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தியதாக 6 டிராக்டர், 4 லாரி, 20 மாட்டு வண்டிகள், 2 ஜேசிபி, ஒரு வேன், ஒரு பைக் என மொத்தம் 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, வேலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி ஆற்றுமணலை மாட்டுவண்டி, டிராக்டர், லாரிகள் மூலமாக எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியது: அனுமதியின்றி சிலிகா மணல் இருப்பு வைத்திருப்பது, வாகனத்தில் எடுத்துச்செல்வது கண்டறியப்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். 
மேலும், அரவை ஆலை மூலம் உற்பத்தி செய்யப்படும் கற்களுக்கு புவியியல், சுரங்கத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து, நடைச்சீட்டு பெற்றுச்செல்ல வேண்டும். அவ்வாறு அனுமதியின்றியும், உரிய நடைச்சீட்டு எதுவுமின்றி கனிமங்கள் எடுத்துச் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 
இந்த கனிம கடத்தலில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, கனிமங்கள் சேகரித்து வைத்து விற்பனை செய்வோர் அதற்குரிய உரிமங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT