வேலூர்

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் தடுத்தால் குண்டர் சட்டம் பாயும்: ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை

7th Sep 2019 02:48 AM

ADVERTISEMENT

குடிமராமத்துத் திட்டத்தில் ஏரிகளைத் தூர்வாரும் பணியின்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் தடுப்போர்  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்கப்படுவர் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
தமிழக அரசின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மூலம் 220 சிறுபாசன ஏரிகள், 481 குளங்கள், ஊரணிகள் ரூ.15.81 கோடி மதிப்பிலும், பொதுப் பணித்துறை நீர் மேலாண்மைத்துறை மூலம் 49 ஏரிகள், 4 கால்வாய்கள் ரூ.12 கோடி  மதிப்பீட்டிலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் 100 பண்ணைக் குட்டைகள் ரூ.81 லட்சம் மதிப்பிலும் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
இதில், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் ஒன்றியங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். சேனூர் ஊராட்சி ஏரி, லத்தேரி ஏரி, சித்தேரி ஏரி, பசுமாத்தூர் பெரிய ஏரி, சித்தேரி, குடியாத்தம் வேப்பூர் ஏரி, கல்லப்பாடி ஊராட்சி ஏரி ஆகியவற்றைப் பார்வையிட்ட ஆட்சியர், ஏரிகளை மட்டுமின்றி அவற்றின் நீர்வழிப்பாதைகளையும் தூர்வாரவும், அதில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன், ஏரிகளுக்குள்பட்ட ஆயக்கட்டுதாரர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் உள்ள 220 ஏரிகள், 461 குளம் குட்டைகள், பொதுப்பணித் துறை  கட்டுப்பாட்டில் உள்ள 49 பெரிய ஏரிகள், 4 பாசன கால்வாய் ஏரிகள் என மொத்தம் 53 ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகிறது. 
இதில், ஊரகப் பகுதிகளில் உள்ள 190 ஏரிகள், 300 குளம் குட்டைகளில் 80  சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த தூர்வாரும் பணியின்போது, ஏரிகளைச் சுற்றியுள்ள பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து கலந்தாலோசித்து அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி, பொதுப்பணித் துறை ஏரி கரைகள், குளம், குட்டைகள்  சீரமைக்கும்போது ஏரியின் எல்லை வரைபடங்களைக் கொண்டு எல்லைகள் அளக்கப்பட்டு எல்லைக்கற்கள்  பதிக்கப்படும். 
அப்போது,  ஏரிகளைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் அவற்றை அகற்றிடும்  பணிகள் மேற்கொள்ளப்படும். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தடுத்தாலோ, மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
ஆய்வின்போது, கே.வி.குப்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.லோகநாதன்,  பொதுப்பணித் துறை நீர் வள ஆதாரம் முதன்மைப் பொறியாளர் தனபால், செயற்பொறியாளர்கள்  மலர்விழி, ராஜவேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT