வேலூர்

அரக்கோணத்தில் புதைசாக்கடைப் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு

7th Sep 2019 11:45 PM

ADVERTISEMENT

அரக்கோணம் நகராட்சியில் நடைபெற்றுவரும் புதைசாக்கடைப் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குநர் விஜயகுமார் தெரிவித்தார்.
அரக்கோணம் நகராட்சியில் தற்போது நான்கு இடங்களில் தலா ரூ. 52 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை மையங்களின் கட்டுமானப்பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வெள்ளிக்கிழமை வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் விஜயகுமார் அரக்கோணம் வந்தார். அரக்கோணத்தில் ரத்தன்சந்த் நகர், சிவபாதம் நகர், சோமசுந்தரம் நகர், ராஜீவ்காந்திநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். ரத்தன்சந்த் நகரில் பணிகள் முடிவடைந்த நிலையில், சோமசுந்தர நகரில் 95 சதவிகித பணிகள் முடிவடைந்து இறுதி கட்டத்தை அடைந்துள்ளதையும் பார்வையிட்டார். மீதமுள்ள இரண்டு இடங்களிலும் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.  
அவருடன், அரக்கோணம் நகராட்சி ஆணையர் சு.முருகேசன், பொறியாளர் சண்முகம், நகரமைப்பு அலுவலர் தாமோதரன், மேலாளர் தே.து.கோபிநாத் உள்ளிட்ட அலுவலர்களும் உடன் சென்றனர்.  தொடர்ந்து நிர்வாக இயக்குநர் விஜயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 
அரக்கோணம் நகராட்சியில் நடைபெற்று வரும் புதை சாக்கடைப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. நகரில் மோசமாக உள்ள 50 சாலைகளைச் சீரமைக்கும் பணி முதற்கட்டமாக தொடக்கப்பட்டுள்ளன. மேலும், அரக்கோணம் நகராட்சியில் ரோடு போடுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அந்த வழக்கை பொருத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் விஜயகுமார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT