வேலூர்

வாடிக்கையாளர்களின் வருகை குறைந்ததால் மூடுவிழாவை நோக்கி ராணிப்பேட்டை உழவர்சந்தை

4th Sep 2019 02:29 AM

ADVERTISEMENT

விவசாயிகளின் பெயரால் வியாபாரிகள் ஆதிக்கம் காரணமாக, வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து மூடு விழாவை நோக்கி ராணிப்பேட்டை உழவர் சந்தை சென்று கொண்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிராமப்புற விவசாயிகளின் விளைநிலத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள், தேங்காய், வாழை இலை, பூக்கள் உள்ளிட்ட அனைத்து விதமான விளைப்பொருள்களுக்கும் கட்டுபடியான விலை பெறவும், இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளை தங்கள் விளைப்பொருள்களை விற்பனை செய்து கொள்வதற்கு ஏதுவாக கடந்த 1999-ஆம் ஆண்டு உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது. 
 உழவர் சந்தை தொடங்கும் அதிகாலை நேரத்தில் விவசாய கிராமங்களில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் உழவர் சந்தைகளுக்கு விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களுக்கு பேருந்துகளில் சுமைக் கட்டணம் இல்லாமல், உழவர் சந்தையில் விற்பனை மேற்கொள்ள விவசாயிகளுக்குத் தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு நியாயமான விலையும், காய்கறிகள் விற்கையில் கைமேல் பணமும் கிடைப்பதால் ஆர்வமடைந்த விவசாயிகள் உழவர் சந்தைகளுக்கு தாங்கள் விளைநிலத்தில் விளைந்த அனைத்து விதமான விளைப்பொருட்களையும் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.
அதேபோல, நகர்ப்புற நூகர்வோர்களும் தாங்களுக்கு இயற்கையான சத்தான காய்கறி, பழங்கள் குறைந்த விலையில் தோட்டத்தில் பறித்த உடனே பசுமை மாறாமல் கிடைக்கிறது என்ற திருப்தியுடன் தொடர்ந்து உழவர் சந்தையை தேடி வந்து வாங்கி செல்கின்றனர். 
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உழவர்களுக்காக திறக்கப்பட்ட உழவர் சந்தைகளில் விவசாயிகள் என்ற போர்வையில் வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. 
ராணிப்பேட்டை நகரில் கடந்த 2000-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி சுமார் 40 கடைகளுடன் உழவர் சந்தை திறக்கப்பட்டது. அப்போது ராணிப்பேட்டை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விவசாய விளைப்பொருள்களை ஆர்வத்துடன் கொண்டு வந்து விற்பனை செய்து லாபமடைந்தனர். அதேபோல, ராணிப்பேட்டை நகர மக்கள் மட்டுமின்றி சிப்காட் சுற்றியுள்ள பொதுமக்களும் பயனடைந்து வந்தனர். 
தொடர்ந்து சிறப்பாகவும், பரபரப்பாகவும் செயல்பட்டு வந்த உழவர் சந்தை கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் வருகை குறைந்து களை இழந்து வருகிறது.
இந்நிலையில், உழவர் சந்தையில் கடை வைத்துள்ள 90 சதவிகிதம் பேர் விவசாயிகள் என்ற போர்வையில் முறைகேடாக அடையாள அட்டை வைத்துக்கொண்டு வியாபாரிகளிடம் காய்கறிகளை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், இதனால் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்பட்டு நாளடைவில் உழவர் சந்தைக்கு விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வருவதில்லை என புகார் எழுந்துள்ளது. 
இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் வருகை குறைந்து வியாபாரம் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் மாவட்ட வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் நரசிம்மா ரெட்டி அண்மையில் ராணிப்பேட்டை உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது உழவர் சந்தைக்கு அதிக அளவிலான விவசாயிகளை விளைப்பொருட்களை கொண்டுவந்து விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும், மேலும் உழவர் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தாங்களின் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை போக்குவரத்து இடையூறாக சாலைகளிலும், உழவர் சந்தையின் நுழைவு வாயிலிலும் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி சென்றதாக கூறப்படுகிறது. ஆகவே விவசாயிகள், நுகர்வோர் இருதரப்பும் பயனடையும் வகையில் உழவர் சந்தையை மூடாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், நகர மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT