வேலூர்

கூலித் தொழிலாளி கொலை: இளைஞர் கைது

4th Sep 2019 07:41 AM

ADVERTISEMENT

திருப்பத்தூரில் கூலித் தகராறு காரணமாக சக தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்தவர் குமரேசன்(35). அதே பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா(25). இருவரும் கூலித்தொழிலாளர்கள். 
குமரேசன் திங்கள்கிழமை வழக்கம் போல் சூர்யா மற்றும் சக தொழிலாளர்களை பணிக்கு பிரித்து அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார். 
அப்போது, பணிக்குச் செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்திய சூர்யா, வேலைக்குச் செல்லுமிடத்தில் குறைவான கூலி தருவதால், அங்கு யாரும் வேலைக்கு செல்லக்கூடாது எனக் கூறி சக தொழிலாளர்களைத் திரும்ப அழைத்துச் சென்று விட்டாராம்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை வீட்டிற்கு வெளியே குமரேசன் அமர்ந்திருக்கும்போது அங்கு சூர்யா வந்துள்ளார். இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சூர்யா அங்கிருந்து சென்று விட்டார்.
மீண்டும் இரவு 9 மணியளவில் குமரேசன் தனது வீட்டில் கூலி கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு மது அருந்திய நிலையில் சூர்யா வந்தார். 
மீண்டும் குமரேசனிடம், சூர்யா தகராறில் ஈடுபட்டதால் கடும் வாக்குவாதம் எழுந்தது. இதில், ஆத்திரமடைந்த சூர்யா தான் மறைத்து வைத்திருந்த மூட்டை தூக்கும் கொக்கியால் குமரேசனின் கழுத்தில் குத்தி உள்ளார். மேலும், கத்தியால் வயிற்றுப்பகுதி சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். 
அவரை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இறந்த குமரேசனுக்கு, மனைவி மற்றும் 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.
இதுகுறித்து,திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். 
சாலை மறியல்:  இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை காலை குமரேசனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்  தலைமறைவாக இருந்த சூர்யாவை கைது செய்யக்கோரி திருப்பத்தூர்- சேலம்-திருவண்ணாமலை இணைப்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பத்தூர் டிஎஸ்பி.,ஆர். தங்கவேலு தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தலைமறைவாக உள்ள சூர்யாவை கைது செய்வதாக வாக்களித்த பின் மறியலை கைவிட்டு, கலைந்துச் சென்றனர்.
இந்நிலையில் சூர்யாவை செவ்வாய்க்கிழமை மாலை போலீஸார் கைது செய்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT