வேலூர்

அரக்கோணத்தில் காற்றுடன் பலத்த மழை

4th Sep 2019 07:40 AM

ADVERTISEMENT

அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமை மாலை காற்றுடன் பெய்த பலத்தமழையில் திருத்தணி சாலையில் மின்கம்பம் சாய்ந்ததாலும், சோளிங்கர் சாலையில் புளியமரம் கீழே விழுந்ததாலும் இருசாலைகளிலும் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 
அரக்கோணம் நகரில் செவ்வாய்க்கிழமை திடீரென கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் மாலை 5 மணி அளவில் சூறாவளிக் காற்றுடன், பலத்த மழை பெய்தது. 
சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த மழையால் நகரமே இருள் சூழ்ந்தது. சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளுடன் சென்றன. பள்ளிகள் விட்ட நேரமாக இருந்ததால் மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடியே சென்றனர். 
அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் எம்ஆர்எப் தொழிற்சாலை அருகே மழையினால் மின்கம்பம் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  
இச்சிபுத்தூர் துணை மின்நிலையத்தில் மின்பணியாளர்கள் விரைந்து சென்று மின்சாரத்தை துண்டித்து கம்பத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அரைமணி நேரத்திற்கு பிறகு அச்சாலையில் போக்குவரத்து சீரானது.
அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நெடுஞ்சாலையில் இருந்த புளியமரம் திடீரென சாய்ந்தது. 
அப்போது அதன் கீழே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் கிராம பொதுமக்களும், நெடுஞ்சாலைத்துறையினரும் மரத்தை அப்புறப்படுத்தினர். 
இதையடுத்து அங்கும் அரைமணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT