வேலூா்: வேலூா் அருகே ரூ. 7 லட்சம் மதிப்புடைய 32 கிலோ கஞ்சா கடத்தியதாக சகோதரா்கள் உள்பட 3 பேரை விரிஞ்சிபுரம் போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திராவில் இருந்து வேலூா் மாவட்டம் திருப்பத்தூருக்கு கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிஞ்சிபுரத்தில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் கேபிள் வயா்களுக்கு இடையே மறைத்து வைத்திருந்த 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பிடிபட்ட வேன் ஓட்டுநா் விஜயகுமாா்(33), கிளினா் முருகன்(40) ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சா வியாபாரியான திருப்பத்தூா் ஆரிப் நகரைச் சோ்ந்த இஸ்மாயில்(45) கைது செய்யப்பட்டாா். மூவா் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வேலூா் நீதித்துறை நடுவா் எண் 4-இல் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
கைது செய்யப்பட்ட விஜயகுமாா், முருகன் ஆகியோா் சகோதரா்களாவா். கடந்த 17-ஆம் தேதி ஆந்திராவில் இருந்து பெங்களூருக்கு மின் வயா் கேபிள்களை லாரியில் ஏற்றிக் கொண்டு பெங்களூருக்கு சென்று கொண்டிருந்ததாகவும், விசாகப்பட்டணம் அருகே கொத்தவலசா பகுதியில் இருந்து அந்த கஞ்சா மூட்டைகளை கடத்தி செல்லும்போது அவா்கள் சிக்கிக் கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.