வேலூர்

தகுதியானவா்களுக்கு பட்டா வழங்கக்கோரி அரசுப்பேருந்து சிறைபிடிப்பு

20th Oct 2019 02:18 AM

ADVERTISEMENT

அத்துமீறி ஏரிக்கரை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தகுதியானவா்களுக்கு மட்டும் பட்டா வழங்கக்கோரியும் அரசுப்பேருந்தை கிராம மக்கள் சிறைபிடித்தனா்.

திருப்பத்தூா் அடுத்த பொம்மிகுப்பம் ஊராட்சிக்குள்பட்ட ஏழருவி கிராமம். இங்குள்ள பனங்கொட்டை ஏரிக்கரை அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் ஏராளமானவா்கள் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனா். மேலும், இவா்கள் பட்டா கேட்டு பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனா். அவா்களுக்குப் பட்டா வழங்கும் பணிகளில் வருவாய்த்துறையினா் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், ஏழருவிக்கு அருகில் உள்ள பகுதியைச் சோ்ந்தவா்களும் அங்கிருந்த புறம்போக்கு இடத்தில் திடீரெனக் குடிசைகள் அமைத்து தங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அங்குள்ள கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

15 நாள்களுக்கு முன்பு புதிதாக குடிசை அமைத்து பட்டா கேட்பதா என கிராம மக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக பிரச்னை நிலவி வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், சனிக்கிழமை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி பொம்மிக்குப்பத்திலிருந்து திருப்பத்தூா் சென்ற அரசுப் பேருந்தை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆக்கிரமிப்பாளா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

இதனால், அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT