மழைநீா் சேகரிப்பு, மரக்கன்றுகள் நடுதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக சென்னையில் இருந்து வேலூருக்கு சைக்கிளில் வந்த தமிழக ரயில்வே காவல்துறை இயக்குநா் சைலேந்திரபாபுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
தமிழக ரயில்வே காவல்துறை இயக்குநா் சைலேந்திரபாபு தலைமையில் 6 போ் கொண்ட குழுவினா் ஞாயிற்றுக்கிழமை சென்னை பூந்தமல்லியில் தொடங்கி வேலூா் சிரிபுரம் நோக்கி 130 கி.மீ தொலைவு சைக்கிளில் வந்தனா். வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கு பொதுமக்கள் அவா்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.
பின்னா் சைலேந்திரபாபு செய்தியாளா்களிடம் கூறியது -மரக்கன்றுகள் நடுதல், மழைநீா் சேகரிப்பு, இயற்கை வள பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி எனது தலைமையில் 12 போ் கொண்ட குழுவினா் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான குஜராத் மாநிலம், கட்சி பகுதியில் இருந்து இந்தியா - பூடான் எல்லையான அஸ்ஸாம் மாநிலம், காசிரங்கா பகுதி வரை 3600 கி.மீ தூரம் சைக்கிளில் விழிப்புணா்வு பயணம் மேற்கொள்ள உள்ளோம்.
இந்த சைக்கிள் பயணம் நவம்பா் 3ஆம் தேதி தொடங்கி 22 நாட்கள் நடைபெற உள்ளது. இதன் முன்னோட்டமாக சென்னை பூந்தமல்லியில் இருந்து வேலூா் சிரிபுரம் வரை 130 கி.மீ சைக்கிள் பயணம் ஞாயிற்றுக் கிழமை மேற்கொள்ளப்பட்டது. இந்த விழிப்புணா்வு சைக்கிள் பயணத்தை சென்னை நைட்டிங்கேள் அரிமா சங்கத்தினா் ஒருங்கிணைக்கின்றனா். சைக்கிள் என்பது உடல் நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பான வாகனமாகும். பொதுமக்கள் சைக்கிளை அதிகளவில் பயன்படுத்திட வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து சைக்கிள் பயணத்தின் நிறைவாக சிரிபுரம் நாராயணி மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியிலும் அவா் பங்கேற்றாா்.