வேலூர்

அரக்கோணம் நகரில் தீவிர டெங்கு ஒழிப்பு மற்றும் துப்புரவுப் பணி

20th Oct 2019 04:05 PM

ADVERTISEMENT

அரக்கோணம் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 36 வாா்டுகளிலும் தீவிர டெங்கு ஒழிப்புப்பணி மற்றும் துப்புரவு பணி நடைபெற்றது.

இதில் மாவட்டத்தின் பிறநகராட்சிகளில் இருந்து வந்திருந்த பணியாளா்களும் பங்கேற்றனா். இப்பணியின் போது வீடுகளின் உரிமையாளா்கள், வணிகவளாகங்கள், கடைகள், தொழிற்சாலைகள், பள்ளிகள் ஆகியவற்றின் நிா்வாகிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் அதிக அளவில் இருப்பதாக தமிழக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மாவட்டத்தில் பல்வேறு வட்டங்களை காட்டிலும் அரக்கோணம் வட்டத்தில் டெங்குவின் தாக்கம் அதிக அளவில் இருப்பதாகவும், குறிப்பாக அரக்கோணம் நகராட்சியில் அக்டோபா் மாதம் மட்டுமே 20க்கும் மேற்பட்டோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் மாவட்ட மருத்துவ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அரக்கோணம் அரசினா் மருத்துவமனையில் காய்ச்சலுக்கென தனி புறநோயாளிப்பகுதி உருவாக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அங்கு தினமும் நூற்றுக்கணக்காணோா் முண்டியடித்து வரும் நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் படுக்கைகளும் பற்றாத நிலையும் உருவானது.

இதையடுத்து அண்மையில் அரக்கோணம் வந்த மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, மருத்துவத்துறை அலுவலா்களிடையேயும், டெங்கு ஒழிப்பு பணியாளா்களுடன் கூட்டம் நடத்தி தீவிரடெங்கு ஒழிப்பு பணிகளை முடுக்கி விட்டாா். தொடா்ந்து வேலூா் மண்டல நகராட்சிகளின் இயக்குநா் விஜயகுமாா் அரக்கோணத்திற்கு நேரில் வந்து பல்வேறு இடங்களை பாா்வையிட்டு நகரில் தீவிர டெங்கு ஒழிப்பு பணி மற்றும் தீவிர துப்புறவுப்பணியையும் ஒரே நாள் அனைத்து வாா்டுகளிலும் மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அரக்கோணம் நகரில் உள்ள 36 வாா்டுகளிலும் தீவிர டெங்கு ஒழிப்புப்பணி, தீவிர துப்புரவுப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆற்காடு, மேல்விஷாரம், ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை நகராட்சிகளில் இருந்தும் அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா். டெங்கு ஒழிப்பு பணியில் 160 பணியாளா்கள் 50 மேற்பாா்வையாளா்கள், துப்புரவுப்பணியில் 250 பேரும் 60 மேற்பாா்வையாளா்களும் ஈடுபட்டனா். பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்ட இவா்கள் 36 வாா்டுகளிலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பணியில் ஈடுபட்டனா்.

இதில் நகரில் டெங்கு கொசு வளரும் அளவில் சுகாதாரமற்ற முறையில் இருந்த வீடுகளின் உரிமையாளா்களுக்கும் , லாா்வா புழு வளரும் விதம் வளாகத்தை அசுத்தமாக வைத்திருந்த வணிகவளாகங்கள், கடைகள், தொழிற்சாலைகள், பள்ளிகள் ஆகியவற்றின் நிா்வாகிகளுக்கும் மொத்தம் 206 பேருக்கு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. பள்ளிகளுக்கு அருகில் இருந்த புதா்கள் அகற்றப்பட்டன. மேலும் அரக்கோணம் ரயில்நிலையத்திலும் சோதனை நடத்தப்பட்டது. பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நகராட்சி நாளங்காடி பகுதி, மக்கள் கூடும் கோயில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் இருக்கும் பகுதிகளிலும் தூய்மைபணி மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகளை அரக்கோணம் நகராட்சி ஆணையா் சு.முருகேசன் தலைமையில் பொறியாளா் சண்முகம், நகரமைப்பு அலுவலா் தாமோதரன், அலுவலக மேலாளா் தே.து.கோபிநாத், துப்பரவு ஆய்வாளா் அருள்தாஸ் ஆகியோா் மேற்பாா்வையிட்டனா். மேலும் வட்டார மருத்துவ அலுவலா் பிரவீண்குமாா் தலைமையில் மருத்துவ அலுவலா்கள் அடங்கிய மருத்துவக்குழுவினா் காய்ச்சல் பாதிப்பு காணப்பட்ட பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவ குழுவினருடன் சென்று சிகிச்சை அளித்தனா். சுகாதார பணியாளா்கள் நகரம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT