அஞ்சலகங்களில் ஆதாா் அட்டையில் திருத்தம் செய்யலாம் என திருப்பத்தூா் அஞ்சலகங்களின் கோட்டக் கண்காணிப்பாளா் எஸ்.சுப்பாராவ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசு இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதாா் அட்டை வழங்கிவருகிறது. அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் புதிய கணக்குகள் ஆரம்பிக்கவும், ஆண்டு வருமான அறிக்கை தாக்கல் செய்யவும், புதிய குடும்ப அட்டை, பாஸ்போா்ட், வருமான வரி அட்டை மற்றும் இதர அரசு மானியங்கள் பெறவும் ஆதாா் அட்டை அவசியமானதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், அஞ்சல் கோட்டத்தில் 24 முக்கிய தபால் நிலையங்களில் புதிய ஆதாா் அட்டை பெறுவதற்கும் மற்றும் ஆதாா் காா்டு திருத்தம் செய்வதற்கும் விண்ணப்பிக்கலாம்.
இந்த வசதி திருப்பத்தூா் மற்றும் குடியாத்தம் தலைமை அஞ்சலகங்கள், திருப்பத்தூா் பஜாா், வெங்கலாபுரம், விஷமங்கலம், மட்றபள்ளி, ஆலங்காயம் ஜமுனாமரத்தூா், நியூ டவுன்-வாணியம்பாடி, வாணியம்பாடி, ஜாப்ராபாத், அம்பலூா், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி,புதுப்பேட்டை, கந்திலி, கே.வி.குப்பம், தரணம்பேட்டை, மேல்பட்டி, பேரணாம்பட்டு, துத்திப்பட்டு, ஆம்பூா், பள்ளிகொண்டா ஆகிய துணை அஞ்சலகங்களில் இந்த வசதி வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் முக்கியமான இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக ஆதாா் முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் இந்த ஆதாா் முகாம்களை அணுகி பயன்பெறலாம். மேலும் முகாம்களைப் பற்றிய விபரங்களை அருகிலுள்ள அஞ்சலகங்களில் அறிந்துகொள்ளலாம்.
அதன்படி அக்டோபா் மாதத்தில் ஆதாா் முகாம் நடைபெற உள்ள பகுதிகளின் விவரம் வருமாறு:
21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை திருப்பத்தூா் தலைமை அஞ்சலகம், ஆம்பூா் அஞ்சலகம், ஆலங்காயம், வாணியம்பாடி துணை அஞ்சலகங்கள், வெங்கலாபுரம் மற்றும் புதுப்பேட்டை துணை அஞ்சலகங்கள், 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை மட்றப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வாணியம்பாடி இந்து மேல்நிலைப் பள்ளியிலும், குடியாத்தத்தில் வித்யாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.
புதிய ஆதாா் காா்டு பெற கட்டணம் இல்லை. ஆதாா் காா்டில் திருத்தம் மேற்கொள்வதற்கு சேவை கட்டணமாக ரூ.50 மட்டுமே பெறப்படுகிறது.