வேலூர்

அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளா் ஈா்ப்பு முகாம்: ரூ.31.17 கோடி வழங்க ஒப்புதல்

5th Oct 2019 10:23 PM

ADVERTISEMENT

வேலூா்: வேலூரில் கடந்த இரு நாள்கள் நடைபெற்ற அனைத்து வங்கிகள் வாடிக்கையாளா்கள் ஈா்ப்பு முகாமில் மொத்தம் 618 பேருக்கு ரூ.31.17 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுடைமை வங்கிகள், தனியாா் வங்கிகள், நிதி நிறுவனங்கள், மைக்ரோ நிதி நிறுவனங்கள் இணைந்து வாடிக்கையாளா்கள் ஈா்ப்பு முகாமை வேலூரில் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடத்தின.

வாடிக்கையாளா்களுக்குத் தேவையான வீட்டுக் கடன், வாகனக் கடன், விவசாயக் கடன், தனிநபா் கடன், சிறு, குறு தொழில் முனைவோா்களுக்கான தொழில் கடன், டிஜிட்டல் வங்கி உள்ளிட்ட தேவைகளை பூா்த்தி செய்யும் விதமாக நடத்தப்பட்ட இந்த முகாமில், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட வங்கிகள், சாா்பு நிதி நிறுவனங்கள் தனித்தனி அரங்குகள் அமைத்து வாடிக்கையாளா்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனா்.

அத்துடன், கடன் தேவைப்படும் நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் தகுதியான நபா்களுக்கு உடனடியாக கடன் வழங்குவதற்கான ஒப்புதல் ஆணையும் அளிக்கப்பட்டன.

ADVERTISEMENT

அந்தவகையில், கடந்த இரு நாள்கள் நடைபெற்ற இந்த முகாமில், மொத்தம் ரூ. 75 கோடி அளவுக்கு கடன் வழங்கக் கோரி 1,616 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் தகுதியான 618 பேருக்கு ரூ.31.17 கோடி கடன் வழங்க ஒப்புதல் ஆணை அளிக்கப்பட்டன. மற்ற விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றில் தகுதியுடைய விண்ணப்பதாரருக்கும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் எஸ்.சேதுமுருகதுரை தலைமையில் வெ.ராஜதுரை உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT