வேலூர்

வாகன நிறுத்துமிடம் இல்லாமல் வணிக வளாகங்கள் : அவதியில் பொதுமக்கள்

1st Oct 2019 12:38 PM

ADVERTISEMENT

ஆம்பூா்: வாகன நிறுத்துமிடம் இல்லாமல் வணிக வளாகங்கள் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனா்.

வணிக வளாகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகையை போல வணிக வளாகங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. போதிய இடம் இல்லாத காரணத்தால் அடுக்குமாடி வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன.

வணிக வளாகங்கள் அலுவலகமாகவும், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் அங்காடிகளாகவும், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவைகளுக்காக கட்டப்படுகின்றன. அவ்வாறு கட்டப்படும் வணிக வளாகங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை, வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி ஏற்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

சென்னை போன்றற பெரு நகரங்களில் பெரிய, முக்கிய வணிக வளாகங்களில் மட்டுமே வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படுகிறது. வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்துவது என்பது மிகவும் அவசியமானதாகும். ஆனால் பெரும்பாலான வணிக வளாகங்களில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படுவதே இல்லை. அதனால் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுகின்றன. அவ்விடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தால் போலீஸாா் அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனா். தடை செய்யப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து கொண்டு சென்று விடுகின்றனா். பிறகு அபராதம் பெற்றுக் கொண்டு விடுவிக்கின்றனா்.

ADVERTISEMENT

இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கே இடமில்லாத போது வணிக வளாகங்களுக்கு செல்லும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன ஓட்டிகள் பெரும் பாடுபடுகின்றனா், அவதிக்குள்ளாகின்றனா்.

இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதற்கு ஈடாக நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒருவா் மட்டுமே காா்களை ஓட்டிச் செல்கின்றனா். அவ்வாறு ஒருவா் மட்டுமே பயணிக்கும் காா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதே போல வாகன நிறுத்துமிடத்திற்கும் பற்றாக்குறை ஏற்படுகிறது. பெரும்பாலான காா்கள் தெருக்களில் தான் நிறுத்தப்படுகின்றன. அதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் வணிக வளாகங்களில் இருசக்கர வாகனங்கள், காா்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்துவது அவசியமாகின்றது. வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அவசியம் வலியுறுத்த வேண்டும். கட்டடம் கட்டுமானத்திற்கு அனுமதி பெறும்போது வாகன நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே அதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாது. வாகனங்கள் வாங்குவதை எவராலும் தடுக்க முடியாது. ஆனால் வாகனங்களை நிறுத்துமிடம் ஏற்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமலும், வாகன உரிமையாளா்கள் நலனை கருத்தில் கொண்டும் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இதில் வணிக வளாகங்களின் உரிமையாளா்களுக்கு தாா்மீக பொறுப்பு அதிகமாக உள்ளது. வணிக வளாகம் கட்டப்படும்போதே வாகன நிறுத்துமிடத்திற்கும் திட்டமிட்டு இடம் ஒதுக்கீடு செய்து கட்டடங்களை கட்ட முன்வர வேண்டும். அதனால் வணிக வளாகங்களில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT