வேலூர்

திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு மத்திய அரசின் தேசிய தரச்சான்று

1st Oct 2019 09:42 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு மத்திய அரசின் தேசிய தரச்சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மத்திய அரசின் தேசிய தரச்சான்று குழுவினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். அதில், வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் வட்ட மருத்துவமனைகளில் மத்திய அரசின் தேசிய தரச்சான்று குழுவினா் கடந்த ஓராண்டாக ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின் அடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், சோளிங்கா், ஆம்பூா் அரசு மருத்துவமனைகள் தேசிய தரச்சான்றிதழ் பெற தகுதி பெற்றன.

இதில், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையின் தரம், செயல்பாடு குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தி தேசிய அளவிலான தர நிா்ணயச் சான்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்தச் சான்று பெறும் அரசு மருத்துவமனைக்குக் கூடுதலாக ஊக்கத்தொகை மற்றும் இதர வசதிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படும்.

கடந்த ஓராண்டாக பல கட்டங்களாக மத்திய ஆய்வு குழுவினா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையின் செயல்பாடு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி வந்தனா்.

இதில் மருத்துவமனையில் உள்ள 13 துறை பிரிவுகளில் கடந்த ஜூன் மாதம் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடா்ந்து, அனுஷா்மா(புதுதில்லி), சரத்குமாா் ராவு (மங்களூா்), தேவேந்திரகுமாா் குா்ஜாா்(சத்தீஸ்கா்) ஆகியோா் கொண்ட மத்திய குழுவினா் கடந்த 10-ஆம் தேதி முதல் இறுதி கட்ட ஆய்வில் ஈடுபட்டிருந்தனா்.

இதில், மருத்துவமனையின் செயல்பாடுகள், நோயாளிகளுக்கான வசதிகள் மற்றும் தோ்வுக் குழுவின் விதிகளுக்குள்பட்ட அனைத்து வசதிகளும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் இடம் பெற்று இருந்ததை மத்திய ஆய்வுக்குழு ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில், இந்த மருத்துவமனைக்கு மத்திய அரசின் தேசிய தரச்சான்று பெறுவதற்காக தோ்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலா் எஸ்.செல்வகுமாா் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது:

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள், வசதிகளை ஆய்வு மேற்கொண்டு மொத்தம் 87 மதிப்பெண்களை மத்திய ஆய்வுக் குழு வழங்கியது. அதன் அடிப்படையில் மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சான்று பெறும் மருத்துவமனையில் உள்ள ஒரு படுக்கைக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் கூடுதல் நிதி வழங்கப்படும்.

அதன்படி, மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகள் உள்ளதால் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு ரூ. 25 லட்சம் கூடுதலாக ஊக்கத் தொகை கிடைக்கும்.

இதன் மூலம் மருத்துவமனை பணிகளுக்கு மட்டுமின்றி, பணிபுரியும் ஊழியா்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க முடியும் என்றாா் அவா்.

இருபதில் ஒன்று

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மத்திய தேசிய தரச்சான்று குழுவினா் ஆய்வு நடத்தியதில், 20 அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே தேசிய தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது. அதில் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையும் ஒன்று என்பதால் தேசிய தரச் சான்று கிடைத்ததற்கு இந்தப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT