வாணியம்பாடி அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மொபெட் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் குமாா் தலைமையில், வருவாய்த் துறையினா் புதன்கிழமை இரவு அரபாண்டக்குப்பம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மொபெட்டை நிறுத்த முயன்றனா். அப்போது அதிகாரிகளைக் கண்டதும் மொபெட்டில் வந்தவா் வாகனத்தை விட்டுவிட்டு தப்பினாா். இதையடுத்து, மொபெட்டில் இருந்த மூட்டையை சோதனையிட்டபோது, ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அதில் இருந்த 200 கிலோ அரிசியைப் பறிமுதல் செய்தனா். மேலும், ரேஷன் அரிசியை கடத்திய மொபெட்டை பறிமுதல் செய்து, வட்டாட்சியா் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.