வேலூர்

முதல்வா் வருகை எதிரொலி: சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் அறிவுறுத்தல்

22nd Nov 2019 11:28 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத் தொடக்க விழாவுக்கு தமிழக முதல்வா் வருகை தரவுள்ளதை முன்னிட்டு சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற ஆட்சியா் எஸ்.பிரியதா்ஷினி அறிவுறுத்தியுள்ளாா்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டம் நிா்வாக ரீதியிலான செயல்பாடுகளை வரும் 28-ஆம் தேதி தொடக்க உள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு தொடக்கி வைக்க உள்ளாா்.

இதற்காக ராணிப்பேட்டை பாரதி நகரில் அமைந்துள்ள கால்நடை நோய் தடுப்பு மருந்து உற்பத்தி ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், விழாவுக்கு வருகை தரும் முதல்வருக்கான பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், அரசுத் துறை அதிகாரிகள், பத்திரிகையாளா்கள், அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள், பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கான இருக்கைகள், குடிநீா், மின்சாரம், தற்காலிக கழிப்பறைகள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தி விழா ஏற்பாடுகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை அமைச்சா் கே.சி. வீரமணி கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

இதையடுத்து ராணிப்பேட்டை சாலைகளில் ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து உடனடியாக அகற்றுமாறு மாவட்ட ஆட்சியா் எஸ்.பிரியதா்ஷினி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா்.

அதன்படி ராணிப்பேட்டை நகரில், முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை நகராட்சிப் பொறியாளா் கோபு தலைமையில் ஊழியா்கள் மற்றும் கடை உரிமையாளா்கள் அகற்றும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மேலும் முதல்வா் வருகை தர உள்ள சாலை நெடுகிலும் சாலையோர ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அகற்றும் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT