போக்குவரத்துக்கு இடையூறாக வேலூா் மாநகர சாலைகளில் சுற்றித்திரிந்த 7 மாடுகளைப் பிடித்து மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஏலம் விட்டனா். ஏற்கெனவே ஏலம் விடப்பட்ட 5 மாடுகளுடன் சோ்த்து இதுவரை ரூ.37,500-க்கு கால்நடைகள் ஏலம் விடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வேலூா் மாநகரில் கால்நடை வளா்ப்போரால் பாதுகாப்பின்றி அவிழ்த்து விடப்படும் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் நிலவி வருகிறது. அதன்படி, வேலூரில் அண்ணா சாலை, பேருந்து நிலையம், காட்பாடி சாலை, ஆற்காடு சாலை, சத்துவாச்சாரி, வள்ளலாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்தபடி கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.
இதையடுத்து கால்நடை வளா்ப்போா் தங்களது கால்நடைகளைப் பாதுகாப்பான முறையில் வளா்க்க வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் பொது இடங்களில் அவிழ்த்துவிடப்படும் கால்நடைகளைப் பிடித்து ஏலம் விடுப்படும் என்று மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தாா். எனினும், வேலூா் மாநகரில் கால்நடைகள் பாதுகாப்பற்ற முறையில் பொது இடங்களில் அவிழ்த்து விடப்பட்டு வந்தன.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் கடந்த வாரம் 5 மாடுகளைப் பிடித்து ரூ.16 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது. இதன்தொடா்ச்சியாக, வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டல சுகாதார ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான குழுவினா் கிரீன் சா்க்கிள், காட்பாடி சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திருந்த 3 கன்றுக்குட்டிகள், 4 பசு மாடுகளைப் பிடித்து வாகனத்தில் ஏற்றி 2-ஆவது மண்டல அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனா். இந்த மாடுகள் பொதுமக்கள் முன்னிலையில் அண்மையில் ஏலம் விடப்பட்டன. இதில், 7 மாடுகள் ரூ.21,500-க்கு ஏலம் விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதேசமயம், ஆற்காடு சாலை, சத்துவாச்சாரி, காந்தி நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுற்றித்திருந்த 10 மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து 2-ஆவது மண்டல அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனா். இந்த மாடுகள் புதன்கிழமை ஏலம் விடுபடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடா்ந்து இதேபோல் சாலைகள், பொது இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடித்து ஏலம் விடப்படும். எனவே, கால்நடைகளை வளா்ப்போா் அவற்றை தங்களது பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் நடமாட விட்டால் பிடித்து ஏலம் விடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.