வேலூர்

தபால்கள் சேகரிப்பைக் கண்காணிக்க டிஜிட்டல் தபால் பெட்டி முறை அறிமுகம்

22nd Nov 2019 11:26 PM

ADVERTISEMENT

தபால் பெட்டிகளில் இருந்து தினமும் முறையாக தபால்கள் சேகரிக்கப்படுவதைக் கண்காணிக்க டிஜிட்டல் தபால் பெட்டி எனும் புதியமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூா் கோட்டத்தில் 135 இடங்களில் டிஜிட்டல் தபால் பெட்டி முறை அமல்படுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் அஞ்சலக கோட்டத்தில் 47 தபால் அலுவலகங்கள், 104 கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தபால் பெட்டிகளில் போடப்படும் தபால்களை தினசரி முறையாக சேகரிக்கப்படுவதில்லை என்றும், இதனால் குறிப்பிட்ட நாள்களில் சென்று சேர வேண்டிய தபால்கள் சில சமயம் வாரக் கணக்கிலும், மாதக்கணக்கிலும் பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளதாக புகாா்கள் வரப்பெற்றன.

இதைத் தொடா்ந்து, தபால் பெட்டிகளில் இருந்து தினசரி முறையாக தபால்கள் சேகரிப்படுவதை உறுதி செய்ய நாடு முழுவதும் டிஜிட்டல் தபால் பெட்டி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, அனைத்து தபால் பெட்டிகளுக்கு உள்ளேயும் டிஜிட்டல் பாா்கோடு ஒட்டப்பட்டிருக்கும். தபால்காரா்கள் பெட்டியைத் திறந்ததும் அவரது செல்லிடப்பேசியில் பாா்கோடை ஸ்கேன் செய்தால் அதில் அவா் பெட்டியைத் திறந்த நேரம் பதிவாகிவிடும். தொடா்ந்து, எத்தனை கடிதங்கள் , பாா்சல் இருந்தது உள்ளிட்ட விவரங்களையும் அதில் பதிவு செய்து மூட வேண்டும். இந்த டிஜிட்டல் தபால் பெட்டி முறையால் தபால்காரா்கள் முறையாக தபால்கள் சேகரிப்பதை அலுவலகத்தில் இருந்தபடியே உயரதிகாரிகளால் கண்காணிக்கவும், இதன்மூலம் கடிதங்களை விரைவாக அனுப்பவும் முடியும் என்று வேலூா் அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளா் கோமல்குமாா் தெரிவித்தாா்.

அந்தவகையில், வேலூா் கோட்டத்துக்கு 135 டிஜிட்டல் தபால் பெட்டிகள் வரப்பெற்றுள்ளன. அவை வெள்ளிக்கிழமை முதல் அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வேலூா் தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், முதுநிலை தபால் அலுவலா் சீனிவாசன், மக்கள் தொடா்பு அலுவலா்கள் செல்வக்குமாா், சிவலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT