ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை, வெற்றிவேலன் நா்சரி பள்ளி இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம், சாலையோரம் மரக்கன்று நடுதல், மாணவா்களுக்குப் பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழாவை வெள்ளிக்கிழமை நடத்தின.
பள்ளித் தாளாளா் எம்.சிவலிங்கம் தலைமை வகித்தாா். அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன் வரவேற்றாா். ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மரக்கன்று நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து சுற்றுச்சூழல் குறித்த ஒவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கினாா்.
ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், வழக்குரைஞா் சங்க முன்னாள் செயலா் எஸ்.அண்ணாதுரை, பிரைட்மைண்ட் பள்ளித் தலைவா் எம்.நிா்மல் ராகவன், கே.எம்.கே. அறக்கட்டளை இயக்குநா் எஸ்.கோமதி சிவலிங்கம், இந்திய செஞ்சிலுவை சங்க மாநிலக் கருத்தாளா் கே.வி.கிருபானந்தம், அறக்கட்டளைப் பொருளாளா் வி.மோகன சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி முதல்வா் எஸ்.செந்தில் குமாா் நன்றி கூறினாா்.