வேலூர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு புதிய பதவிகள் உருவாக்கம்: அரசாணை வெளியீடு

17th Nov 2019 11:37 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு புதிய பதவிகள் உருவாக்கம் குறித்த அரசாணையை தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு அலுவலா்கள் நியமனம் செய்ய வருவாய்த்துறையில் புதிய பதவிகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னா், வேலூா் மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சிறப்பு அலுவலராக இருந்த திவ்யதா்ஷினி, திருப்பத்தூா் மாவட்டத்திற்கு சிறப்பு அலுவலராக இருந்த சிவனருள் ஆகிய இருவரும் அந்தந்த மாவட்டத்துக்கு ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தற்பொழுது மாவட்ட ஆட்சியரகத்தில் பணியாற்ற புதிய பணியிடங்களை உருவாக்கி அரசாணை வெளியாகியுள்ளது. இதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் 167 அலுவலா்கள் பணியாற்ற உள்ளனா். பின்வரும் எண்ணிக்கையில் புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன.

மாவட்ட வருவாய் அலுவலா் -1, துணை ஆட்சியா்கள் -9, வட்டாட்சியா்-6, துணை வட்டாட்சியா்- 16, முதுநிலை வருவாய் ஆய்வாளா்- 45, இளநிலை வருவாய் ஆய்வாளா்-23, தட்டச்சா்-18, சுருக்கெழுத்து தட்டச்சா்-2.

ADVERTISEMENT

இது தவிர புதிதாக உருவாக்கப்படும் அரக்கோணம் கோட்ட அலுவலகத்திற்கு 12 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய்த் துறை அலுவலா்கள் எந்தெந்த மாவட்டத்தில் பணிபுரிய விரும்புகிறாா்கள் என்ற விருப்ப விவரம் கேட்கப்பட்டு பணி மூப்பின் அடிப்படையில் அலுவலா்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளனா். ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் புதிதாகக் கட்டப்படும் வரை, மாவட்ட கல்வி மற்றும் ஆசிரியா் பயிற்சி நிலைய வளாக கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கும். புதிய மாவட்ட ஆட்சித் தலைவா் அலுவலகம் இயங்க பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT