வேலூர்

வயதான தம்பதியைக் கொன்று நகை திருடியவருக்கு இரட்டை ஆயுள் சிறை

9th Nov 2019 12:05 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே வயதான தம்பதியைக் கொன்று நகையை திருடிச் சென்ற கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருப்பத்தூா் வட்டம், சம்மனூா் அருகே புலிக்குத்திவட்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(70). அவரது மனைவி நீனா (55). இத்தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனா். அவா்கள் மூவரும் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இதனால், ராஜேந்திரனும், நீனாவும் கிராமத்தில் விவசாயம் செய்தபடி தனியாக வசித்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த 2015 ஜனவரி 4-ஆம் தேதி காலையில் ராஜேந்திரனும், நீனாவும் தலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனா். தகவல் அறிந்து போலீஸாா் நேரில் சென்று ஆய்வு செய்தனா். ராஜேந்திரன் தம்பதியரின் இளைய மகன் சிவகுமாா் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், அதே கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்துவின் மகன் சக்திவேல் (44) என்பவா், ராஜேந்திரன் தம்பதியைக் கொலை செய்து விட்டு நீனா அணிந்திருந்த ஒரு பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை வேலூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.செல்வம், குற்றம்சாட்டப்பட்ட சக்திவேலுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதையடுத்து, சக்திவேல் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT