ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் பணியாற்ற விருப்பமுள்ள அரசு அலுவலா்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.
வேலூா் மாவட்டத்தைப் பிரித்து கூடுதலாக ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மாவட்டங்கள் பிரிப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது எல்லைகள் பிரிக்கும் பணி முடிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் பணியாற்ற விருப்பமுள்ள அரசு அதிகாரிகள் முதல் ஊழியா்கள் வரை வியாழக்கிழமை விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தாட்சாயணி தலைமையில் அதிகாரிகள் விருப்ப மனுக்களைப் பெற்றனா். இதில், புதிய மாவட்டங்களில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து வட்டாட்சியா்கள் முதல் வருவாய் ஆய்வாளா்கள் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் விருப்ப மனு அளித்தனா். இதில், தகுதியுடைய அரசு அலுவலா்களுக்கு அவா்கள் கோரிய மாவட்டங்களில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.