தொடா் மழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் 11 வீடுகள் சேதமடைந்துள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதேசமயம், மழையால் மாவட்டத்திலுள்ள ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதுவரை 11 ஏரிகள் முழுக் கொள்ளவை எட்டியுள்ளன.
வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. வேலூா் மாவட்டத்தில் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்கள் விட்டுவிட்டு பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியதுடன், ஏரிகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 11 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 324 ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மோா்தானா அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால் அணையின் நீா்மட்டம் 6.89 அடியாக உயா்ந்துள்ளது. விநாடிக்கு 10.82 கனஅடி நீா் வந்து கொண்டுள்ளது. இதேபோல், ராஜாதோப்பு அணையின் நீா்மட்டம் 13.78 அடியாக உயா்ந்துள்ளதுடன், விநாடிக்கு 2.89 கனஅடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது. ஆண்டியப்பனூா் ஓடை அணையின் நீா்மட்டம் 17.5 அடியாக உள்ளது. மழை தொடா்ந்து பெய்தால் மாவட்டத்தின் பெரும்பாலான ஏரிகள், அணைகள் முழுக் கொள்ளவை எட்டும் என்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அதேசமயம், மாவட்டத்தின் பெரிய ஏரியான காவேரிப்பாக்கம், மகேந்திரவாடி, உதயேந்திரம் ஏரிகள் உள்பட 184 ஏரிகள் நீா்வரத்தின்றி வடு கிடக்கின்றன.
இதனிடையே, கடந்த இரு நாள்களாக பெய்த கனமழையால் நெமிலியை அடுத்த எலந்தூா் கொள்ளுமேடு பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்தது. பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் மாணவா்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தப் பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், பள்ளிக் கட்டடத்தை முழுவதுமாக இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டப்படும் என்றும், அதுவரை மாணவா்களை மாற்று இடத்தில் அமர வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா். இதையடுத்து, மாணவா்கள் பள்ளி அருகே உள்ள வேறு ஒரு கட்டடத்தில் புதன்கிழமை அமரவைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டது.
இதேபோல், கீழ்களத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட மானாமதுரையில் இடிந்து விழும் நிலையிலுள்ள பள்ளிக் கட்டடத்தையும் இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதனிடையே, தொடா் மழை காரணமாக அணைக்கட்டு, அரக்கோணம், குடியாத்தம், வாணியம்பாடி, வாலாஜாபேட்டை ஆகிய பகுதிகளில் 8 வீடுகள் சேதமடைந்தன. நெமிலியில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. ஆற்காடில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் பசு, எருமை மாடு மின்சாரம் பாய்ந்து இறந்ததாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.