வணிக வளாகத்தில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் சேதம்

வேலூரில் வணிக வளாகத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

வேலூரில் வணிக வளாகத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
வேலூர் அண்ணா சாலை, தெற்கு காவல் நிலையம் எதிரே 3 அடுக்கு வணிக வளாகம் அமைந்துள்ளது. இதன் தரைதளத்தில் காலணி உள்ளிட்ட தோல் பொருள்கள் கடையும், முதல் தளத்தில் துணிக்கடை கிடங்கும், 2 மற்றும் 3-ஆவது தளங்களில் தங்கும் விடுதியும் செயல்பட்டு வருகின்றன. 
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் வழக்கம்போல் ஊழியர்கள் காலணி கடையை பூட்டிச் சென்றனர். இரவு 11.30 மணியளவில் திடீரென கடையில் உள்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதாகத் தெரிகிறது. சிறிதுநேரத்தில் கடையின் வெளிப்பகுதி தீப்பற்றி எரிந்தது. அத்துடன், முதல் தளத்தில் இருந்த துணிக்கடைக்கும் தீ பரவியது.
தகவலறிந்த வேலூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதல்கட்டமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், தங்கும் விடுதியில் தங்கியிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, காட்பாடி, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கலவரத்தின்போது கூட்டத்தைக் கலைக்க பயன்படுத்தும் வஜ்ரா வாகனம் மற்றும் டிராக்டர்களிலும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 
30-க்கும் மேற்பட்ட வீரர்கள் 4 மணி நேரத்துக்கும் மேல் போராடி அதிகாலை 3.30 மணியளவில் தீயை முழுமையாக அணைத்தனர். 
இந்தத் தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான காலணி, பேக்குகள், துணி பண்டல்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து தெற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com