வேலூர்

பளுதூக்கும் பயிற்சி மையத்தில் சேர வீரர்கள் தேர்வு

29th Jun 2019 08:04 AM

ADVERTISEMENT

வேலூரிலுள்ள பளுதூக்கும் சிறப்பு விளையாட்டு மேம்பாட்டு மையத்தில் சேர வீரர், வீராங்கனைகளின் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 42 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். 
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பளுதூக்கும் பயிற்சி மையத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு விளையாட்டு மேம்பாட்டு மையத்துக்கு 2019-2020-ஆம் ஆண்டுக்கான பளுதூக்கும் வீரர், வீராங்கனைகளை சேர்ப்பதற்கான தேர்வுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மைய மேலாளர் உமாசங்கர், பயிற்சியாளர்கள் விநாயகமூர்த்தி, கவிதா, முன்னாள் பளுதூக்கும் வீரர் முத்து, காமன்வெல்த் வீரர் சதீஷ்சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சத்துவாச்சாரி, சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் 60 பேரும், மாணவிகள் 30 பேரும் பங்கேற்றனர். இவர்களில் மாணவர்கள் 30 பேரும், மாணவிகள் 12 பேரும் சிறப்பு விளையாட்டு மேம்பாட்டு மையத்தில் பயிற்சி பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டனர். 
இதுகுறித்து பயிற்சி மைய நிர்வாகிகள் கூறியது:
இப்போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சிறப்பு விளையாட்டு மேம்பாட்டு பயிற்சி மையத்தில் 9 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி காலத்தில் உணவு, சீருடை போன்றவை வழங்கப்படும். மேலும், மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT