வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட நெக்குந்தி ஊராட்சியில் நியூ சிகர்னப்பள்ளி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளும் முற்றிலும் வற்றிவிட்டதால் ஊராட்சி மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் விவசாயிகளின் நிலத்தில் உள்ள பம்ப் செட்டில் இருந்து பலமணி நேரம் காந்திருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தும் நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்தவும் அல்லது புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய கோரியும் ஊராட்சி செயலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, நெக்குந்தி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சீரான குடிநீர் கிடைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.