வேலூர்

தண்ணீரைச் சேமிக்க வாளிகளைப் பயன்படுத்த வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

29th Jun 2019 08:04 AM

ADVERTISEMENT

குழாய் வழியாக தண்ணீரை நேரடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வாளிகளில் பிடித்து பயன்படுத்துவதால் நாளொன்றுக்கு ஒவ்வொரு குடும்பத்தினரும் 300 லிட்டர் நீரை சேமிக்க முடியும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலூர் மாவட்டத்தில் பருவ மழை பொய்த்ததால் சில இடங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது. இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும், பொதுமக்களும் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் நீரை வாளிகள் மூலம் உபயோகித்து விலைமதிப்பில்லாத தண்ணீரைப் பாதுகாக்க வேண்டும்.
வீடுகளில் மக்கள் நேரடியாக குழாய் மூலம் குளிக்கும்போது 100 லிட்டர் செலவாகிறது. இதைத் தவிர்த்து வாளியில் தண்ணீர் பிடித்து குளிக்கும்போது 18 லிட்டர் மட்டுமே செலவாகும். இதன்மூலம் 82 லிட்டர் அளவுக்கு தண்ணீரைச் சேமிக்க முடியும். அதேபோல், பல் துலக்கும்போது குழாயில் நேரடியாகத் தண்ணீரைப் பயன்படுத்தினால் 5 லிட்டர் செலவாகிறது. இதைத் தவிர்த்து குவளையில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தும்போது 750 மி.லி. தண்ணீர் மட்டுமே செலவாகிறது. இதன்மூலம் 4.25 லிட்டர் வரை தண்ணீர் சேமிக்க முடியும். 
கழிப்பறை உபயோகத்தில் கழிப்பறைத் தொட்டியில் 20 லிட்டர் உபயோகிப்பதைத் தவிர்த்து வாளியின் மூலம் 6 லிட்டர் பயன்படுத்தினால் 14 லிட்டர் தண்ணீரைச் சேமிக்க இயலும். ஆண்கள் முகச்சவரம் செய்யுபோது குழாயைப் பயன்படுத்துவதால் 5 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. குவளையில் தண்ணீர் பிடித்து முகச்சவரம் செய்யும்போது 750 மி.லி. தண்ணீர் மட்டுமே செலவாகும். 
துணி துவைக்க குழாய் நீரைப் பயன்படுத்தினால் 116 லிட்டர் நீர் செலவாகும். இதைத் தவிர்த்து வாளிகளில் நீர்பிடித்து துணிகளைத் துவைப்பதால் 36 லிட்டர் தண்ணீர் செலவாகும். இதனால் தண்ணீரை 80 லிட்டர் வரை சேமிக்க முடியும். தொட்டியில் உள்ள செடிகளுக்கு குழாய் மூலம் நீர் பாய்ச்சினால் 50 லிட்டர் தண்ணீர் செலவாகும். ஆனால் வாளியில் தண்ணீர் பிடித்து செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் 10 லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவாகி 40 லிட்டர் தண்ணீரைச் சேமிக்கலாம். 
வாகனங்களைக் கழுவுவதற்கு குழாயில் 100 லிட்டர் செலவாகும். அதற்குப்  பதிலாக வாளியில் பிடித்து பயன்படுத்தினால் 18 லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவாகும். 
இதன் மூலம் 82 லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம். தோட்டச் செடிகளுக்கு குழாயில் 100 லிட்டர் தண்ணீர் பாய்ச்சுவதைத் தவிர்த்து நீர் தெளிப்பானில் 25-இல் இருந்து 30 லிட்டர் வரை தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலம் 70-இல் இருந்து 75 லிட்டர் தண்ணீர் சேமிக்க முடியும். இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் காண இயலும். 
எனவே, இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றி ஒவ்வொரு குடும்பத்தினரும் குறைந்தபட்சம் 300 லிட்டர் நீரை சேமித்து இயற்கை வழங்கும் விலைமதிப்பற்ற நீரை வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT