வேலூர்

சென்னைக்கு ரயிலில் தண்ணீர்:குழாய் அமைப்பதற்கான பணி தீவிரம்

29th Jun 2019 11:48 PM

ADVERTISEMENT


ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்காக குழாய் அமைக்கப்படும் பகுதியைச்  சீரமைக்கும்   பணிகள் சனிக்கிழமை தொடங்கின.
சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்காக தமிழக அரசு சார்பில் ரூ. 65 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதையொட்டி, கடந்த வாரத்தில் முதற்கட்டமாக சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய  அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஜோலார்பேட்டை மேட்டுச்சக்கரம், கேதாண்டப்பட்டி, பார்சம்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு ராட்சத குழாய் அமைக்கப்பட்டு, அதிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிலையில், மேட்டுச்சக்கரக்குப்பத்தில் இருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் வரை குடிநீர்க் குழாய் அமைக்க அப்பகுதியை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. விரைவில் குடிநீர்க் குழாய் அமைக்கும் பணி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT