காட்பாடி-சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. இதனால் அங்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கும், கடைக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட காட்பாடி-சித்தூர் பேருந்து நிலையத்தில் சாலையை ஆக்கிரமித்து பேனர், கடைகளின் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை அடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தி வந்தனர். எனினும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் முதலாவது மண்டல அலுவலர் மதிவாணன் தலைமையில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் இணைந்து காட்பாடி-சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள 30 கடைகளின் ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றினர். மேலும், அங்கிருந்த 6 பைக்குகள், விளம்பர பேனர்களையும் வேனில் ஏற்றிச் சென்றனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றியபோது அங்கிருந்த கடைக்காரர்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இதனால், அப்பகுதியில் காட்பாடி காவல் ஆய்வாளர் புகழ் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.