வேலூர்

வேலூரில் மதுவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

31st Jul 2019 08:37 AM

ADVERTISEMENT

மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள வேலூரில் மதுவுக்கு எதிராக வழக்குரைஞர் நந்தினி கையெழுத்து இயக்கத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளார். 
மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் நந்தினி, மதுவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார். மதுரையில் இருந்து இருசக்கர வாகன பயணத்தை திங்கள்கிழமை தொடங்கிய அவர், செவ்வாய்க்கிழமை காலை வேலூருக்கு வந்தார். 
வேலூர் அரசு சட்டக்கல்லூரி மாணவர் களிடம் மதுவுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை நடத்தினார். தொடர்ந்து, பொதுமக்களிடமும் கையெழுத்து பெற்றார். அவருடன் அவரது தந்தை ஆனந்தன், கணவர் குணாஜோதிபாசு ஆகியோரும் இருந்தனர்.
 இதுகுறித்து, வழக்குரைஞர் நந்தினி செய்தியாளர்களிடம் கூறியது: 
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 328-இன்படி போதைப்பொருள்கள் விற்பனை செய்வது குற்றமாகும். அவ்வாறு போதை தரும் பொருள்களை விற்போருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் அரசுக்கு எந்தவித விதிவிலக்கும் அளிக்கப்படவில்லை. ஆனால், அரசு அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு மதுவை விற்பனை செய்து கொண்டுள்ளது. மேலும், அரசின் கொள்கை முடிவில் யாரும் தலையிடக் கூடாது என்றும் கூறிவருகிறது. சட்டத்துக்கு விரோதமாக ஒரு அரசு கொள்கை முடிவு எடுக்க முடியாது. 
இதனால், தமிழகத்தில் 98 சதவீதம் பேர் மதுஅருந்தத் தொடங்கி விட்டனர். எனவே, மது விற்பனையைத் தடுத்து நிறுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறோம். இந்த கையெழுத்துகளை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளோம் என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT