வேலூர்

அதிமுகவின் இரட்டை நிலைப்பாடு: முத்தரசன் குற்றச்சாட்டு

31st Jul 2019 08:36 AM

ADVERTISEMENT

புதிய கல்விக் கொள்கை,  ஹைட்ரோ கார்பன் திட்டம்,  10 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றில் அதிமுக அரசு இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார்.
வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து ஆம்பூரில் அவர் செவ்வாய்க்கிழமை பேசியது:
தமிழகத்தின் வேலூர்,  திருவண்ணாமலை,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  சென்னை மாவட்டங்களுக்கு விவசாயம்,  குடிநீர் ஆதாரமான பாலாற்றில் கர்நாடக,  ஆந்திர அரசுகள் தடுப்பணைகளை கட்டி தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரைக் கிடைக்காமல் செய்துள்ளன.  தமிழகத்தின் எல்லைப் பகுதியில் சுமார் 222 கி.மீ. ஓடும் பாலாற்றில் தமிழக அரசு தடுப்பணை கட்ட வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சிகள்,  பல்வேறு அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்துள்ளன.  அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
2017-18-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் கல்வி,  பொதுப்பணி, குடிநீர்,  சாலைக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 28 ஆயிரம் கோடி செலவழிக்கப்படாமல் அரசு கஜானாவிற்குத் திரும்பியுள்ளது.  புதிய கல்விக் கொள்கை, ஹைட்ரோ கார்பன் திட்டம்,  10 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றில் இரட்டை நிலைப்பாட்டை அதிமுக அரசு கடைப்பிடிக்கின்றது.  தமிழ்நாடு மக்களின் உரிமைகள், நலன்கள் மத்திய அரசால் பறிக்கப்படுகிறது. எனவே,  வேலூர் தொகுதியிலும் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும் என்றார்.  
இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன்,  வேலூர் மாவட்டச் செயலாளர் சாமிக்கண்ணு,  துணைச் செயலாளர் எஸ்.ஆர்.தேவதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT