வேலூர்

வேலூர் மக்களவைத் தேர்தல்: போலீஸார் தபால் வாக்குப் பதிவு

30th Jul 2019 07:57 AM

ADVERTISEMENT

வேலூர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ள போலீஸார் திங்கள்கிழமை தபால் வாக்குப் பதிவு செய்தனர். 
வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் 7,552 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் சுமார் 5,100 பேர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள். இவர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே வாக்குப்பதிவு செய்ய வசதியாக ஏற்கெனவே நடைபெற்றுள்ள 3 கட்ட பயிற்சி முகாம்களிலேயே அவர்களுக்கு தேர்தல் பணிச்சான்று வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு 4-ஆம் கட்ட பயிற்சி முகாமில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதனிடையே, தேர்தல் பாதுகாப்புப் பணியில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 1,086 போலீஸார் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான தபால் வாக்குப் பதிவு வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட போலீஸார் வாக்குப் பதிவு செய்தனர். முன்னதாக, இந்த வாக்குப் பதிவை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். 
வாக்குப்பதிவு முடிக்கப்பட்டு சீலிடப்பட்ட பெட்டி ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும், வாக்கு எண்ணிக்கை நாளன்று வாக்கு எண்ணும் மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். திங்கள்கிழமை மாலை வரை மொத்தம் 574 பேர் தபால் வாக்குகளை அளித்திருந்தனர்.
தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நாளான ஆக. 9-ஆம் தேதி காலை 7.49 மணிக்குள் தபால் வாக்குகளை அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT