வேலூர்

வாணியம்பாடியில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரசாரம்

30th Jul 2019 07:54 AM

ADVERTISEMENT

வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் திங்கள்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
வாணியம்பாடி தொகுதி, திருப்பத்தூர் ஒன்றிய பகுதிக்குள்பட்ட பூங்குளம் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேசியது: 
இத் தொகுதியில் நான் வெற்றி பெற்றால் இம்மாவட்டத்தை நோயில்லாத மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன். நான் ஒருபுறம் மக்களுக்காக மருத்துவ சேவை செய்து வந்தாலும், இப்பகுதியில் தேர்தல் பொறுப்பாளராக பணியற்றி வரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதாரத்துறையில் பல்வேறு திட்டங்களை செய்ய உள்ளார். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்பேட்டையை உருவாக்கித் தருவேன். வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். கிராமப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி நோய்களைக் கண்டறிந்து உரிய சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை மேற்கொள்வேன். இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானங்களை அமைத்துத் தருவேன் என்றார்.
தொடர்ந்து, மிட்டூர், ஆண்டியப்பனூர், இருணாபட்டு, குரிசிலாப்பட்டு, பல்லவள்ளி, பெருமாபட்டு, இடையனூர், ஓமகுப்பம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கிராமம் கிராமமாகச் சென்று திறந்த ஜீப்பில் நின்றவாறு அமைச்சர்களுடன் வாக்கு சேகரித்தார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேல், முன்னாள் எம்எல்ஏ-க்கள் கோவி.சம்பத்குமார், ரமேஷ், திருப்பத்தூர் ஒன்றியச் செயலர் செல்வம், பாமக மாநில துணைச் செயலர் டி.கே.ராஜா, மாநிலத் துணைத் தலைவர் பொன்னுசாமி, பூங்குளம் முன்னாள் ஊராட்சித் தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT