வேலூர்

முதல்வரின் வாக்குறுதியால் கே.வி. குப்பம் மக்கள் உற்சாகம்: அமைச்சர் க.பாண்டியராஜன்

30th Jul 2019 07:57 AM

ADVERTISEMENT

கே.வி. குப்பம் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் வாக்குறுதி அளித்திருப்பது மக்களை உற்சாகப்படுத்தியுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்தார். 
திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து கே.வி. குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூரில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை ஏற்பதாக ஞாயிற்றுக்கிழமை கே.வி. குப்பத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி வாக்குறுதியளித்தார். 
கே.வி. குப்பம் தனி வட்டமாக அறிவிக்கப்படும், பாலாறு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின்கீழ் தொகுதியின் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் வாக்குறுதி அளித்தார். இது இப்பகுதி மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரக் கூட்டங்களில் கூறி வருகிறார். திமுக ஆட்சியின்போது பட்டப் பகலில் பல்வேறு கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றதை யாரும் மறந்துவிட முடியாது. கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. 
இதைப் பொறுத்து கொள்ள முடியாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சிலசம்பவங்களைச் சுட்டிக்காட்டி தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்று அவர் கூறுவது ஏற்புடையதல்ல.
மாநிலத்தில் நடைபெறும் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களை காவல்துறை உடனுக்குடன் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார். 
இதைத்தொடர்ந்து, கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் எம்எல்ஏக்கள் சு. ரவி, ஜி. லோகநாதன், கே.வி. குப்பம் ஒன்றிய அதிமுக செயலர் கே.எம்.ஐ. சீனிவாசன் உள்ளிட்டோர் சென்றனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT