குப்பம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் எரிபொருள் (பெட்ரோல்) ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலை எரிபொருள் நிரப்பிய டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. குருவிநாயனபள்ளி அருகில் செல்லும்போது, லாரி நிலைத்தடுமாறி சாலையின் நடுவில் கவிழ்ந்தது. இதனால் லாரியிலிருந்த பெட்ரோல் சாலையில் கசியத் தொடங்கியது.
பெட்ரோல் கசிவின் காரணமாக, சாலையில் செல்லும் வாகனங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்த தமிழக தீயணைப்புத்துறையினர் ஆந்திர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்குமுன் விரைந்து செயல்பட்டு, முன்னெச்சரிக்கையாக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதன்காரணமாக, அப்பகுதியில் கடுமையான பெட்ரோல் நெடி வீசியது. மேலும் சாலையின் நடுவே, லாரி கவிழ்ந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் லாரி அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.