வேலூர்

விவசாய நிலத்தில் தோல் கழிவுகள் கொட்டுவதைக் கண்டித்து போராட்டம்

29th Jul 2019 07:31 AM

ADVERTISEMENT

ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் தோல் கழிவுகள் கொட்டப்படுவதைக் கண்டித்து விவசாயிகள், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆம்பூர் அருகே சின்னவரிக்கம் ஊராட்சி சின்னவரிகம், சின்னவரிகம் காலனி, ரகுநாதபுரம், மேகனாம்பல்லி, சென்னப்ப நகர், அருந்ததி காலனி ஆகிய கிராமங்கள் உள்ளன. சின்னவரிகம் ஊராட்சியில் ரகுநாதபுரம் - சின்னவரிகம் இணைப்புச் சாலையில் பாட்டை சாரதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகே தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் லாரிகள் மூலம் தோல் கழிவுகள் கொண்டுவந்து, அதிக அளவில் கொட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
 அதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் மழையின்போது, தோல் கழிவுகளில் இருந்து அளவுக்கு அதிகமான துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாகவும், இதனால் நோய் தாக்குதலுக்கு பலர் ஆளாகி வருவதாகவும் இப்பகுதியினர் குற்றம்சாட்டி வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இணைந்து இப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  விவசாய சங்க மாவட்டத் தலைவர் லோகநாதன், மாவட்டச் செயலர்கள் எஸ்.உதயகுமார், என்.ரகுபதி, மாவட்ட துணைத் தலைவர்கள் ஸ்ரீ ராமுலு ஆனந்த ரெட்டியார், ஒன்றிய துணைச் செயலர்கள் கோதண்டன், முருகேசன், ஜெகநாதன், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT