திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் தேசியத் தரமதிப்பீட்டுக் குழுவின் உதவியுடன் தேசியக் கருத்தரங்கம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டி.மரியஅந்தோனிராஜ் தலைமை வகித்தார். துணை முதல்வர் சேவியர் ராஜரத்தினம் வரவேற்றார். கல்லூரி இல்லத் தந்தையும், செயலருமான சி.அந்தோணிராஜ் வாழ்த்துரை வழங்கினார். கல்வியின் அடிப்படைகள் குறித்து பெங்களூரு செயின்ட் ஜோசப் வணிகவியல் கல்லூரிப் பேராசிரியர் ஆர்.இமாசலபதியும், கல்வி மற்றும் நிர்வாகவியல் தணிக்கை குறித்துத் தூய நெஞ்சக் கல்லூரி கணினித் துறைத் தலைவர் எல்.ரவி ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து ஆய்வரங்குக்கு செகந்திராபாத் மல்லாரெட்டி குழுமப் பொறியியல் கல்லூரியின் கணினி துறைத் தலைவர் எம்.நாராயணன் தலைமை வகித்தார். இதில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து, தூய நெஞ்சக் கல்லூரியின் உள் தரமதிப்பீட்டுக் குழுத் தலைவர் எஸ். சகாயராஜ், உயர்கல்வி நிறுவனங்களில் தரமதிப்பீடு பெறுவதற்கான நடைமுறைகளும் செயல்முறைகளும் என்ற தலைப்பில் பேசினார்.
2-ஆம் நாள் கருத்தரங்கில் மாற்றியமைப்பட்ட தரமதிப்பீடு விதிமுறைகளின் பயன்பாடும் சவால்களும் என்ற தலைப்பில் முதல்வர் மரியஅந்தோனிராஜ் பேசினார்.
ஆய்வின் மகிழ்ச்சி எனும் தலைப்பில் சென்னை ஐஐடியின் இயந்திரவியல் துறை பேராசிரியர் சி.பாலாஜி, கற்றல் கற்பித்தல் மதிப்பீடு குறித்து சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் உயிரி தொடர்பியல் துறைத் தலைவர் ஓர்டேட்டா மென்டோசா பேசினர். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 100 பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.