வேலூர்

விஐபி தரிசனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு

16th Jul 2019 08:05 AM

ADVERTISEMENT

ஏழுமலையான் கோயிலில் விஐபி-க்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசனத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஆந்திர உயர்நீதிமன்றம், வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
இக்கோயிலில் முக்கிய பிரமுகர்களுக்கு தேவஸ்தானம் விஐபி தரிசனத்தை வழங்கி வருகிறது. இதை எதிர்த்தும், அனைத்து பக்தர்களையும் சமமாக நடத்துமாறு தேவஸ்தானத்துக்கு உத்தரவிடக் கோரியும் ஹைதராபாத்தைச் சேர்ந்த உமேஷ் சந்திரா என்பவர், அமராவதியில் உள்ள ஆந்திர உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்தார்.
அதன் மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, விஐபி தரிசனம் தொடர்பான அரசாணை நகலைச் சமர்ப்பிக்குமாறு ஆந்திர அரசிற்கும், தேவஸ்தானத்துக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர். 
இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. எனினும், தேவஸ்தானம் சார்பில் விஐபி தரிசனம் குறித்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய உள்ளதாக வழக்குரைஞர் தெரிவித்ததார். 
இதைக் கேட்ட நீதிபதிகள், "புதிய அறங்காவலர் குழு அமைக்கப்படாமல், அதன் தலைவரது அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. இது குறித்த அரசாணை நகலைச் சமர்ப்பிக்க வேண்டும். விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்து விட்டு, வேறு பெயரில் தரிசனம் வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அதனால் இது குறித்த முழு விவரங்களையும் வரும் வியாழக்கிழமை சமர்ப்பிக்க வேண்டும்' என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
எதிர்ப்பும், ஆதரவும்: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக சுப்பா ரெட்டி பொறுப்பேற்றவுடன், விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய உள்ளதாகவும், முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன், திருமலை செயல் இணை அதிகாரியாக சீனிவாச ராஜு பொறுப்பேற்ற பின் விஐபி பிரேக் தரிசனத்தில் எல்-1, 2, 3 என மூன்று பிரிவுகள் கொண்டு வரப்பட்டன. அதற்கு முன் வரை அனைத்து பக்தர்களுக்கும் தரிசனத்தில் சம வாய்ப்பே தரப்பட்டது. 
தர்மா ரெட்டி தேவஸ்தான சிறப்பு அதிகாரியாக இருந்தபோது தரிசன முறைகளை மாற்றி அமைத்தார். தற்போது அவர் மீண்டும் சிறப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார். அதனால் விஐபி பிரேக் தரிசனத்தில் கட்டாயம் மாற்றம் கொண்டுவரப்படும் என்று தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், விஐபி பிரேக் தரிசனம் மூலம் தேவஸ்தானத்திற்கு வரும் வருமானத்தை ஏன் தடுக்கிறீர்கள்? என்று கேட்டு சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
நடைமுறைகளில் மாற்றம்: விஐபி பிரேக் தரிசனத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு எதிரொலியாக தேவஸ்தானம் தற்போது எல்-1 பிரிவின் கீழ் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தற்போது தீர்த்தம் வழங்குவது மற்றும் சடாரி வைக்கும் சடங்கு கோயிலுக்கு வெளியில் நடத்தப்படுகிறது. எல்-2 பிரிவின் கீழ் ராமுலவாரி மேடை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். எல்-3 பிரிவின் கீழ் (ஜெய, விஜயர்கள் அமைந்துள்ள பகுதி வரை) அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT