அரக்கோணம் நகராட்சிக்கு உள்பட்ட கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை 15 தினங்களுக்குள் ஏற்படுத்தவில்லையெனில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையர் முருகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: அரக்கோணம் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு புதிதாக ஏற்படுத்தப்பட வேண்டும் ஏற்கெனவே இருந்திருந்தால் அது பழுதடைந்துள்ளதாக இருந்தால் அதைச் சீரமைக்க வேண்டும். பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அவர்களது கட்டடங்களில் ஏற்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், அதன் வாயிலாக கட்டட உரிமையாளர்களின் இடத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வாய்ப்பு ஏற்படும். மேலும், தங்கள் குடும்பத்துக்குத் தேவையான நீரை கட்டட உரிமையாளர்களே சேமித்து பாதுகாக்கக்கூடிய நிலை ஏற்படும்.
எனவே, அனைத்துக் கட்டட உரிமையாளர்களும் தங்களது கட்டடத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி, அதன் விவரத்தை நகராட்சி அலுவலகத்துக்கு எழுத்து மூலமாக 15 நாள்களுக்குள் அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நகராட்சி மூலம் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு தமிழ்நாடு நகராட்சிகளின் சட்டம் 1920 பிரிவு 215(ஏ) படி துண்டிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.