வேலூர்

இடையூறாக உள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும்: தமுமுக வலியுறுத்தல்

15th Jul 2019 12:16 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை நகரின் மையப் பகுதியில் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
அக்கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட அவசர பொதுக்குழுக் கூட்டம் ராணிப்பேட்டை அன்நூர் மகாலில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி, மாநிலச் செயலாளர் அவுலியா ஜமால் ஆகியார் பங்கேற்றுப் பேசினர்.
தொடர்ந்து கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக ராணிப்பேட்டை முகமது ஹசன், செயலாளராக வாலாஜாபேட்டை எ.மஸ்தான், பொருளாளராக ஷாஜகான், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 
தீர்மானங்கள்: தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மாநிலத்தின் முதல் நகராட்சியான வாலாஜாபேட்டையில் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்தப் பேருந்து நிலையத்தை உடனடியாக விரிவுபடுபத்தி மேம்படுத்த வேண்டும். 
ராணிப்பேட்டை நகரின் மையப் பகுதியான ஆர்.ஆர்.சாலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெண்கள் பள்ளிகள், வணிக நிறுவனங்களுக்கு அருகில் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இடையூறாக உள்ள இரண்டு டாஸ்மாக் மதுக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT