வேலூர்

வேலூர் தொகுதி தேர்தல் ரத்தாக காரணமானவர்கள் மீது நடவடிக்கை: முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆட்சியரிடம் மனு

12th Jul 2019 09:25 AM

ADVERTISEMENT

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்தாகக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ வாலாஜா அசேன் புகார் தெரிவித்துள்ளார். 
கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற இருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
கடந்த முறை அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் போட்டியிட்ட டி.எம்.கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ வாலாஜா அசேன், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தார். அவர் ஆட்சியர் அ.சண்முகசுந்தரத்திடம் அளித்த மனு: 
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடக்க இருந்த தேர்தல் கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் காரணமாக நிறுத்தப்பட்டது. கடந்த முறை தேர்தல் ரத்தாகக் காரணமானவர்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மீண்டும் அதேபோன்ற தவறு நடகாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? 
கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர், அரவக்குறிச்சி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 
ஆனால், அதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
அதேபோல், வேலூரிலும் தற்போது தேர்தல் நிறுத்தப்படக் காரணமானவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த முறையும் பணப்பட்டுவாடா நடந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? தற்போது வேலூர் தொகுதியில் ஜாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரித்து வருகின்றனர். இது இந்திய ஜனநாயகத்துக்கு எதிரானது என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT