வேலூர்

மக்களவைத் தேர்தல்: வேலூரில் மீண்டும் வாகனச் சோதனை தீவிரம்

6th Jul 2019 11:51 PM

ADVERTISEMENT


வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து மாவட்டம் முழுவதும் மீண்டும் வாகனத் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, தேர்தல் விதிமீறல்களைத் தடுக்க 18 பறக்கும் படைக் குழுக்களும், 18 நிலை கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு குழுவிலும் வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலரும், ஒரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் மற்றும் ஒரு விடியோகிராஃபர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் தீவிர வாகனச் சோதனை உள்ளிட்ட கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இது தவிர, மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் தீவிர வாகனச் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனைகளின்போது உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கமும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மதிப்புடைய பரிசுப் பொருள்களையும் அதிகாரிகள் கைப்பற்றி அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள்
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.  
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அரசியல் கட்சியினர், பொது மக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை 1800 425 3692 (கட்டணமில்லா தொலைபேசி எண்), 0416-2252936 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம். 
உரிய ஆவணங்களுடன் பணத்தை எடுத்துச் செல்ல உத்தரவு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வேலூர் மாவட்டத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாகவோ, ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மதிப்புடைய தங்கம், வெள்ளி போன்ற பொருள்களையோ எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என்று ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த விதிகள் அமலாவதைக் கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், தங்க நகை வியாபாரிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோர் பயணிக்கும்போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாகவோ, ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மதிப்புடைய தங்கம், வெள்ளி போன்ற பொருள்களையோ எடுத்துச் செல்லும்போது அதற்குரிய ஆவணங்களைக் கொண்டு செல்ல வேண்டும். இதேபோல், வங்கித் துறையினரும் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இருப்பு வைக்க செல்லும்போது அதற்குரிய ஆவணங்களைக் கொண்டு செல்ல வேண்டும்.
பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினரின் சோதனைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT