சேலம் இரும்பு உருக்காலை உள்ளிட்ட 3 பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்து, ராணிப்பேட்டை பெல் நிறுவன ஊழியர்கள் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொதுத்துறை நிறுவனங்களான சேலம் உருக்காலை, மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள அலாய் இரும்பு ஆலை, கர்நாடக மாநிலம் பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு ஆலை ஆகிய மூன்று உருக்காலைகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இதற்கான சர்வதேச அளவிலான டெண்டர் அடுத்த மாதம் 1-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. ஏற்கெனவே சேலம் இரும்பு உருக்கு ஆலையை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரம், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொதுத் துறை நிறுவனங்களான சேலம் இரும்பு உருக்காலை உள்ளிட்ட 3 பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, ராணிப்பேட்டை பெல் நிறுவன பி.ஏ.பி. சங்க ஊழியர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.