வேலூர்

இலவச மடிக்கணினி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

4th Jul 2019 07:32 AM

ADVERTISEMENT

இலவச மடிக்கணினி வழங்கக் கோரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர்.
தமிழகம் முழுவதும் அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக மடிக்கணினி வழங்காததால் உயர்கல்வி சென்ற மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஆற்காடு, ராணிப்பேட்டை என பல இடங்களிலும் முன்னாள் மாணவர்கள் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில், ஆற்காடு, திமிரியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் 150 பேர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனர். தொடர்ந்து அவர்கள் அளித்த மனு விவரம்:
கடந்த 2017-18-ஆம் ஆண்டில் பிளஸ் 2 முடித்த எங்களில் பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளில் படித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆனால், தற்போது படித்து வரும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. முதலில் நிலுவையில் உள்ள எங்களுக்கு மடிக்கணினி வழங்கிவிட்டு தற்போது படிக்கும் மாணவர்களுக்கு அதன்பிறகு வழங்க வேண்டும். எங்களுக்கு மடிக்கணினி வழங்கும்பட்சத்தில் உயர்கல்வி பயில மிகவும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். 
மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT