வேலூர்

அரசுக்குச் சொந்தமான இடத்தில் தனியார் கட்டிய கட்டடம் அகற்றம்

4th Jul 2019 07:35 AM

ADVERTISEMENT

கே.வி.குப்பம் அருகே அரசுக்குச் சொந்தமான இடத்தில் தனிநபர் கட்டிய கட்டடத்தை அதிகாரிகள் புதன்கிழமை இடித்து அகற்றினர்.
மூலகாங்குப்பத்தில் ஊராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 85 மாணவர்கள் பயில்கின்றனர். பள்ளி அருகே உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தில் மாணவர்கள் விளையாடி வந்தனர். 
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் சில நாள்களுக்கு முன் அந்த இடத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் போட்டார். 
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் மனுக்கள் அளித்தனர். இதையடுத்து அந்தக் கட்டடத்தை கோயிலாக மாற்றுவதாகக் கூறி, அங்கு கெங்கையம்மன் சிரசு சிலையை வைத்து வழிபாடு செய்தார்.
இந்நிலையில் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோபி, வருவாய் ஆய்வாளர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் பவித்ரா மற்றும் போலீஸார் புதன்கிழமை அங்கு சென்று இடத்தை அளவீடு செய்து, பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டடத்தை இடித்து அகற்றினர். அங்கிருந்த அம்மன் சிலையை அங்குள்ள கோயிலில் வைத்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT