வேலூரில் பழக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகின.
வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் மார்கபந்து (55). காட்பாடி சாலையில் பழக்கடை நடத்தி வருகிறார். இதில், 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். கடையின் மேல்தளத்தில் பழங்கள், பிளாஸ்டிக், அட்டை பெட்டிகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை மதியம் இந்த பிளாஸ்டிக், அட்டைப் பெட்டிகள் இருந்த தளத்தில் திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. இதைப்பார்த்த கடை ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும், கடையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீக்கிரையாகின. தீப்பற்றியதை அறிந்தவுடன் கடையில் பணியாற்றியவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தீ விபத்து காரணமாக வேலூர் - காட்பாடி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனங்கள் அனைத்தும் மக்கான் சிக்னல் வழியாக மாற்றி விடப்பட்டன.