ஆற்காட்டை அடுத்த திமிரியில் கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்றத்தின் 13-ஆம் ஆண்டு விழா திரெளபதியம்மன் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவிற்கு மன்றத் தலைவர் புலவர் ராமதாஸ் தலைமை வகித்தார். பொருளாளர் ப.தங்கராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் தி.க.ஜெயபாலன் வரவேற்றார்.
விழாவில் பேராசிரியர் தி.மு.அப்துல்காதருக்கு கண்ணதாசன் விருதை கவிஞர் கண்ணதாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் வழங்கினார். பின்னர் "மீன் சந்தையில் விண்மீன்' என்ற தலைப்பில் அப்துல் காதர் பேசினார்.
அதைத் தொடர்ந்து, "கண்ணதாசன் பாடல்களில் மேலோங்கி இருப்பது கற்பனைக் குவியலா? கருத்துப் புதையலா?' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவர் பேராசிரியர் நவஜோதி தலைமையில் "கற்பனைக் குவியலே' என்று தணிகைவேல், நீலவேணி ஆகியோரும், "கருத்துப் புதையலே' என்று கவிஞர் த.கோ.சதாசிவம், கவிதா ஆகியோரும் பேசினர். விழாவில் இலக்கிய மன்ற நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.