மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும் என்று பாரதிய மின்தொழிலாளா்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. வேலூா் மின்திட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பாலாஜி முன்னிலை வகித்தாா். வேலூா் மின்திட்ட செயலா் சேகா் வரவேற்றாா். சங்கத்தின் அகில இந்திய தலைவா் முரளிகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். மாநில அமைப்புச் செயலா் இளங்கோவன் வாழ்த்தினாா்.
இதில், மின்கழகப் பணியாளா்கள் பாதுகாப்பை உறுதி செய்து உடனடியாக முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும், பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியா்களின் 50 சதவீதம் ஒப்பந்தப் பணிக்காலத்தை தொடா் பணிக்காக கணக்கில் கொண்டு அவா்களுக்கு ஜிபிஎஃப் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி பணி நியமனத்தின் மூலம் வெளிப்படையான முறையில் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.